Tuesday, June 3, 2014

தந்தைக்குமுன் இறந்து விட்ட மகனின் பிள்ளைகளுக்கு சொத்துரிமை இல்லாததேன்?

அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

இஸ்லாத்தில் ஒரு அழகான வழிமுறைகள் இருக்க , சில முஸ்லிம்கள் மாற்று வழிகளை தேடுவது, அணுகுவது வேதனைக் குரிய விடயம்தான்!


ஒரு தந்தைக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர் அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் அந்த நான்கு பிள்ளைகளில் ஒருவர் தந்தைக்குமுன் இறந்து விடுகிறார் என்றால் அவருடைய பிள்ளைகளுக்கு அந்த பாட்டனார் சொத்தில் பங்கில்லை என்பது ஷரீ அத்தின் சட்டமாகும்.இதில் தந்தையின் காலத்துக்கு பின்னுள்ள அந்த மூன்று மகன்களுக்கோ அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கோ சொத்துரிமை இருக்கும் போது தந்தைக்கு முன் இறந்து விட்டவரின் பிள்ளைகளுக்கு மட்டும் பாட்டனார் சொத்தில் உரிமை இல்லை என்று கூறுவது அறிவுக்கு பொருத்தமானதாகத் தெரியவில்லையே என்றுதான் எண்ணத்தோன்றும் ஆனால், அச்சட்டத்தின் அடிப்படை தத்துவத்தை நன்கு சிந்தித்தால் அதிலுள்ள உண்மை புரியும்.


இதனை ஆராயப் புகுமுன் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு எத்தகையது பாட்டனுக்கும் பேரனுக்கும் உள்ள உறவு எத்தகையது என்பதை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும்.

தந்தைக்கு நேரடியான வாரிசாக வரக்கூடியவர் மகனாகும், பாட்டனுக்கு பேரன் நேரடி வாரிசாக வர முடியாது. எனவே ஒருவர் காலமாகிவிட்டால் அவருடைய சொத்து அவரின் மகனுக்கு சொந்தமாகி விடுகிறது . அந்த மகனும் காலமாகி விட்டப்பிறகு தான் பேரனுக்கு போய் சேருகிறது. வாரிசுரிமை சட்டம் இந்த முறையில் இருப்பதால், தந்தைக்குப்பின் இறந்த மகனின் பிள்ளைகளுக்கு சட்டப்படி வாரிசுரிமை வந்துவிடுகிறது.

தந்தைக்கு முன் ஒரு மகன் இறந்து விட்டால் , அவருடைய வாரிசுரிமையும் அப்போதே அறுந்து விடுகிறது. எனவே அவருடைய பிள்ளைகளுக்கு [அந்த பாட்டன் சொத்தில்] சட்டப்படி வாரிசுரிமை இல்லையென ஷரீ அத் கூறுகிறது.

இருப்பினும் , அந்தப்பிள்ளைகளுக்கு சட்டப்படி வாரிசுரிமை இல்லாவிட்டாலும் அவர்களுக்கு சொத்து கிடைப்பதற்கு வேறு சில வழிமுறைகளை இஸ்லாம் காட்டித்தந்துள்ளது.

''உங்கள் ஒருவருக்கு மரணம் நெருங்கினால், அவர் பொருளை விட்டுச் செல்பவராக இருப்பின் [தம்] பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் நீதத்துடன் வசியத்து  [மரணசாசனம்] செய்தல் உங்களின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது, [இது பய பக்தியுள்ளவர்களின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது'' என்று கூறுகிறது.                        [குர் ஆன் .. 2-180]

இந்த வசனம் , ஒருவருக்கு மரண அறிகுறி தென்படும்போது, அவர் [விரும்புகின்ற] உறவினருக்கு ஓரளவு சொஹ்து கொடுக்கச் சொல்லி வசிய்யத் செய்ய அனுமதி உண்டு என்ற கருத்தை தெரிவிக்கிறது.

இது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் கடமையாக இருந்து, பிறகு நபியவர்களின் ஹதீஸ் மற்றும் இஜ்மாவின் பிரகாரம் கடமை என்பது தளர்த்தப்பட்டு வசியத்திற்கு அனுமதிஉண்டு என்று  சட்டம் வகுக்கப்பட்டது [இதன் அடிப்படையில் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள கடமை என்ற சட்டம் மாற்றப்பட்டதாக ஃ பிக்ஹூ நூல்கள் கூறுகின்றன]

இந்த சொல்லின்படி அந்த பேரப்பிள்ளைகளுக்கு வசியத்தின் மூலம் சொத்து கிடைக்கச் செய்யலாம், அதுவும் மரணத்தருவாயில்தான் இவ்வாறு செய்ய வேண்டுமென்பதல்ல, அவர் நல்ல நிலையில் இருக்கும்போதே நிலைமையை உணர்ந்து அந்த பேரப்பிள்ளைகளுக்கு ஓரளவு சொத்துக்களில் பங்குத்தரவோ, எழுதிவைக்கவோ செய்யல்லாம் இதற்கும் இஸ்லாம் அனுமதிக்கிறது.

மேலும் ஒருகால் பாட்டனார் எதுவுமே செய்யாமல் மரணமாகிவிட்டாலும், பாகஸ்த்தரர்கள்  பாகம் பிரிகின்றபோது, வாரிசுதார்களின் அனுமதியோடு அந்தப்பிள்ளைகளுக்கு  சிறிதளவு சொத்து கொடுப்பது நல்லது என குர் ஆன் கூறுகிறது. எனவே தந்தைக்கு முன் இறந்து விட்டவரின் பிள்ளைகளுக்கு சட்டப்படி இல்லாவிட்டாலும் குர் ஆனில்  நலுபதேசத்தின் படி சொத்துக்கள் கொடுப்பது சம்மந்தப்பட்டவர்களுக்கு சிறந்ததும் நல்லதுமாகும்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்..........

அல்லாஹ் மிக அறிந்தவன்   

No comments:

Post a Comment