Thursday, May 29, 2014

ஆவணங்களை பதிந்து விடுங்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

சொத்து என்றால் நமக்கு ஞாபகத்துக்கு வருவது , பிரச்சனை தான் '' கோர்ட்டு , வக்கீல் என்று காலத்தையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டுதான் சிலர் இருக்கிறார்கள். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் நபி [ஸல்] அவர்கள் சொல்லி தந்த வழிமுறைகளில் போனால் அது வெற்றிதான்! மாறாக பல சிக்கல்களும் , சோதனைகளும் , மன உளைச்சல்களும் தான் வரும் என்பதை நாம் உணர வேண்டும். இது என் சொந்த கருத்து!

''முஃமின்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால் அதனை எழுதி [பதிந்து] கொள்ளுங்கள், உங்களுக்கு மத்தியில் [கடன்] விபரத்தை எழுதுகிறவர் நீதியுடன் எழுதட்டும் ,...........  மேலும் உங்களுடைய ஆண்களிலிருந்து நீதியுள்ள சாட்சியாளர்கள் இருவரை நீங்கள்  சாட்சிகளாக ஆக்கிக்கொள்ளுங்கள்..... மேலும், [கடன் தொகை] கொஞ்சமாக இருந்தாலும் அதனுடைய தவணை வரை [யாரையுடன்] அதை எழுதி கொள்வதற்கு சடையாதீர்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.
[அல்குர் ஆன் ..2..282]

இந்த வசனம் கடன் கொடுக்கல் வாங்கல் பற்றியதாக இருந்தாலும் , குறுகிய காலத்துக்கே எழுத்து மூலமாக பதியவேண்டும் என்று கூறும்போது, காலா காலத்துக்கும் தீர்வாக உள்ள பாகபிரிவினைக்கு சொல்லவே தேவையில்லை கண்டிப்பாக எழுத்து மூலமாகத்தான் எழுதப்பட வேண்டும் என்ற முக்கியமான கருத்த நமக்கு மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. 

அசையாப் பொருள் யாருக்கு ?


ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாரிசுதாரர்களாக இருக்கும் குடும்பத்தில் பாகபிரிவினை செய்கின்றபோது அசையாப் பொருட்கள் ஆண்களுக்குதான் சேரவேண்டும் என்ற கருத்து பொதுவாக மக்களிடையே இருந்து வருகிறது, அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.

பெண் என்பவள் மணம் முடித்து கொடுக்கப்பட்டு கணவன் வீட்டுக்கு போய்விடக்கூடியவள் . இனி எல்லாமே அவளுக்கு கணவன் வீடுதான், ஆண்பிள்ளைகள் வீட்டோடு இருந்து வீட்டையும், பெற்றோர்களையும் பாதுகாத்து பராமரித்து வந்தவர்கள், இனியும் பாதுகாப்பவர்கள்.

எனவே, பாகபிரிவினை என்று வரும்போது அசையாப் பொருட்கள் அதாவது வீடு , மனை , நிலம் மற்றும் கட்டிடங்கள் போன்ற சொத்துக்கள் ஆண்பிள்ளைகளுக்கு  கொடுக்கப்பட வேண்டும்,, பெண் பிள்ளைகளுக்கு உரிய பாகத்துக்கு, அதற்குரிய பணத்தை கொடுத்து விடவேண்டும் என்று பொதுவாக கருதப்படுகிறது. ஆனால், இதுதான் சட்டம் என்று எண்ணுவது தவறாகும்.

இஸ்லாமிய சட்டம் என்னவெனில் இறந்துவிட்டவரின் வீடு, நிலம், மனை , ரொக்கப்பணம் என்று இருக்கும் முழு சொத்தையும் கணக்கீட்டு அந்த  தொகையை வாரிசுதாரர்கள் விகிதாச்சாரப்படி நிலமாகவோ வீடாகவோ, பணமாகவோ பாகம் பிரித்து கொள்ள வேண்டும். இதுதான் சட்டம். இதில் ஆண்களுக்கு அசையா  பொருளும், பெண்களுக்கு பணமாகவும் தான் கொடுக்க வேண்டும் என்ற எந்த விதிமுறையும் கிடையாது.

எனவே, சமந்தப்பட்டவர்கள் கூடிப்பேசி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஆண்  , பெண் என்ற பேதமின்றி யாருக்கு எதை கொடுக்கலாம் என்பதை தீர்மானித்து  அதன்படி பிரித்துக்கொள்ள வேண்டும், பெண்களுக்கு வீடோ நிலமோ  தரமுடியாது என்று யாரும் கூறமுடியாது.

சொத்துக்கு விலை நிர்ணயம்

மேலும்  வீடு , நிலம் போன்ற அசையா பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும்போது நடைமுறையில் உள்ள விலையைதான்  நிர்ணயம் செய்ய வேண்டும். அரசாங்கம் நிர்ணயிக்கும் விலையை வைத்து பாகம் பிரிக்கக்கூடாது . அப்படி  லாபமும் சிலருக்கு பாதிப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அது எப்படி என்பதை பார்ப்போம் .

ஒரு வீடு இருக்கிறது  , அதன் நடைமுறை விலை 30 லட்சம் கவர்மெண்டு நிர்ணயக்கும் விலை 20 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டுக்கு , பாகஸ்த்தர்கள்  நான்கு பேர் இருக்கிறார்கள். இப்போது அரசாங்க விலைப்படி பாகம்  பிரித்தால் ஆளுக்கு 5 லட்சம் வரும். இந்த நிலையில் ஒருவர் அந்த வீட்டை எடுத்துக்கொண்டு மற்ற மூவருக்கும்  தலா ஐந்து லட்சம் வீதம் 15 லட்சம் கொடுத்து விடுகிறார். இப்போது அந்த வீட்டை எடுத்துக்கொண்டவருக்கு நடைமுறை விலைப்படி  பார்த்தால் ரூபாய் 10 லட்சம் அதிகப்படியாக கிடைத்து விடுகிறது இதனால் அந்த மூவரும் பாதிக்கப்பட்டு   விடுகிறார்கள் .

நடைமுறை விலைப்படி பிரிக்கப்பட்டிருந்தால் நபர் ஒன்று  7-1/2 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. எனவே நான் மேல்  குறிப்பிட்டிருக்கும் நுட்பமான விஷயங்களை நன்கு சிந்தித்து விலை மதிப்பீடு விஷயத்தில்  யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
இன்ஷாஅல்லாஹ்  இன்னும் தொடரும்...........

அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment