Sunday, June 15, 2014

உயிலும் -பத்திரமும் செல்லுபடியாகுமா?

அல்லாஹ்வின் திருபெயரால் .......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

பாகப் பிரிவினை -வாரிசுரிமை சட்டங்கள் தொடர்ச்சி......

உயிலும் -பத்திரமும் செல்லுபடியாகுமா?

உயில் என்பது ஒருவர் தன்னுடைய காலத்துக்குப்பிறகு தன்னுடைய சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு சேர வேண்டும் என்ற விபரத்தை தன்னுடைய ஜீவிய காலத்திலேயே எழுதி வைத்து விடுவதாகும். இவ்வாறு எழுதப்படும் அந்த உயில் ஷரீ அத் சட்டப்படி செல்லத்தக்கதல்ல இதனை புரிந்து கொள்ளாத சிலர் உயிலை எழுதி வைத்துவிட்டு காலமாகிவிடுகிரார்கள். இத்தகைய உயிலால் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்பதை இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.


அதே போன்று சிலர் என்னுடைய காலத்துக்குப்பிறகு என்னுடைய சொத்து இன்ன இன்னாருக்கு இவ்வளவு இவ்வளவு என்று பத்திரம் எழுதி பதிவகத்தில் பதிந்தும் விடுகிறார்கள் இதுவும் செல்லத்தக்கதல்ல ஷரீ அத் சட்டப்படிதான் பாகம் பிரிக்கப்படும் .  மேலும் சில விஷயங்களையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்  அதாவது சொத்துக்குரிய ஒருவர் ஜீவித்திருக்கும் போதே, அவருடைய பிள்ளைகளோ, மற்ற வாரிசுதாரர்களோ நாங்கள் தான் உங்களுடைய சொத்துக்கு வாரிசாக வரக்கூடியவர்கள்,, எனவே இப்போதே எங்களுக்கு சொத்தை பிரித்து கொடுத்து விடுங்கள் என்று கேட்க முடியாது.

ஏனெனில் ஒருவர் ஜீவித்திருக்கும் காலமெல்லாம்   அவருடைய சொத்து அவருக்கு மட்டுமே சொந்தமானதாகும் அதில் யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அவர் அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம், அவர் விரும்புகிறவர்களுக்கு கொடுக்கவும் செய்யலாம். அதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் அவராக முன் வந்து பாகஸ்த்தர்களுக்கு  சொத்துகளை பிரித்து கொடுத்து விடலாம். இதற்கு ஷரீ அத் தில் எந்த தடையுமில்லை. மேலும் வாரிசுரிமை என்பது ஒருவர் காலமாகிவிட்ட பிறகு ஏற்படக்கூடியது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியமாகும்.

வசியத்- மரண சாசனம் ~~~

வசியத் என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் , இருப்பினும் அதனுடைய முழு விபரத்தையும் தெளிவாக தெரிந்துகொள்வது அவசியமாகும்.

அதைப்பற்றி திருக்குர் ஆன்  , நம்பிக்கை கொண்டோரே  உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி, அவர் மரண சாசனம் செய்திருந்தால் உங்களைச் சேர்ந்த இருவர்  அதற்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. 5..106]

இந்த வசனம்  நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் யாரும் வசியத் செய்ய முடியாது. எவர் வியாதியால் பாதிக்கப்பட்டு, தமக்கு மரணம் நெருங்கிவிட்டது என்பது உணர்ந்து கொள்கிறாரோ அவரே வசியத் செய்ய முடியும்  என்பதையும், வசியத் செய்பவர் அவசியம் இரண்டு சாட்சிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கிக்காட்டுகிறது.

மொத்த சொத்தில்  எந்த அளவு வசியத் செய்யலாம் என்ற விபரத்தை அடுத்து வரும் ஹதீஸ்  விளக்குகிறது.

நபித்தோழர் ஸஃ து [ரலி] அவர்கள் நபி [ஸல்] அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே!  நான் என்னுடைய சொத்து அனைத்தையும் அறப்பணிக்காக வசியத் [மரண சாசனம்] செய்து விடட்டுமா? என்று வினவுகின்றனர், அதற்கு நபி [ஸல்] அவர்கள் அன்பு நண்பரே! உம்முடைய சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை வசியத்  செய்யும், அதுவும் கூட அதிகம் தான் என்று கூறினார்கள்.
புகாரீ]

இந்த ஹதீஸ் , ஒருவர் தம்முடைய முழு சொத்தையோ அல்லது பாதி சொத்தையோ வசியத் செய்திருந்தாலும் கூட மூன்றில் ஒரு பகுதிதான் செல்லுபடியாகும், அந்த அளவுதான் கொடுக்க வேண்டும் என்ற கருத்தினை தெரிவிக்கிறது. இந்த அடிப்படையிலே தான் ஷரீ அத் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்.......
அல்லாஹ் மிக அறிந்தவன்   

No comments:

Post a Comment