Saturday, May 24, 2014

எழுதப்படாத பாகப்பிரிவினையின் விபரீதங்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யும் போது  யார் யாருக்கு எந்தெந்த சொத்துக்கள் கொடுக்கப்பட்டன, யார் யாருக்கு ரொக்கமாக பணம் கொடுத்து பைசல் செய்யப்பட்டன என்ற விபரங்களை எல்லாம் தெளிவாக எழுத்து மூலமாக ரிஜிஸ்டர் ஆபீசில் பதிந்து விட வேண்டும். அவாறு செய்யாவிட்டால் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் அப்போதைக்குத் தெரியாது, பிற்காலத்தில் சிலருக்கு சாதகமும் சிலருக்கு பாதகமும் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதன் விபரத்தை இப்போது பார்ப்போம்.


ஒரு வீடோ நிலமோ பொது சொத்தாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் . அதற்கு ஆண் , பெண் என்று பல பாகஸ்தர்கள் இருப்பார்கள். அவர்களில் சிலர் ஊரோடும் சிலர் வெளிநாடுகளிலும் இருக்கலாம்  இந்த நிலையில் ஒருவர் எல்லா பாகஸ்த்தர்களுக்கும் ரொக்கமாக பணத்தை கொடுத்து விட்டு ஊரிலிருக்கும் ஓரிருவரை வைத்து முழு சொத்தையும் தன் பேரில் ரிஜிஸ்டர் செய்து கொள்கிறார் இது ஒரு வகை.

இன்னொன்று ஒருவர் சொத்துக்களை தானே எடுத்துக்கொண்டு பாகஸ்த்தர்களிடம்  விடுதலை பத்திரம் [அதாவது அந்த சொத்தில் தமக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று பத்திரம்] எழுதி வாங்கும்போது அருகில் இருப்பர்வர்களிடம் மட்டும் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் எழுதிவாங்காமல் விட்டு விடுகிறார். ஆனால் அனைவருக்கும் பாகத்துக்குரிய பணத்தை கொடுத்து விடுகிறார் இதுஒரு வகை.

மேல் கூறப்பட்ட இரண்டு முறைகளிலும் பாகஸ்த்தர் அனைவர்களுக்கும் அவர்களுக்கு சேரவேண்டிய பாகங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன என்று ஊரறிந்த உண்மையாகும். ஆனால் கால ஓட்டத்தில் மனஸ்த்தாபங் கள் ஏற்படுகின்றபோது விடுதலைப் பத்திரம் எழுதித் தராதவர்களும் ரிஜிஸ்ட்டரில் கையெழுத்து போடாதவர்களும் மனசாட்சியை மறந்து பழிவாங்கும் நோக்கத்திலோ அல்லது பொருளாசையின் காரணத்தாலோ மீண்டும் பாகம் கேட்டு பிரச்சனை பண்ணலாம்.

அதுமட்டுமல்ல, அப்படியே அவர்களுடைய காலம் பிரச்சனை இன்றி கடந்து விட்டாலும் அவர்களுடைய பிள்ளைகளின் காலத்திலும் அதே பிரச்சனை உருவாகலாம். அப்போது அந்த பிள்ளைகள் ரிகார்டுகள் எதுவும் எழுதி தரப்படவில்லை என்ற அதே காரணத்தை முன் வைத்து கிடைத்த வரை லாபம் தானே என்ற பேராசையில் மனசாட்சியை மூட்டைகட்டி வைத்துவிட்டு சம்மந்தப்பட்டவரிடம் மீண்டும் தம் பெற்றோரின் பாகம் எங்கே என்று கேட்டு தொல்லை தரலாம்.

இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று கேட்டுவிடாதீர்கள் [இறையச்சம் உள்ள சாலிஹான மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களைப் பற்றி  இங்கு பேச்சில்லை] பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பதுபோல் பணத்துக்காக எதையும்  செய்யும் பாவிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இத்தகைய வம்பர்கள் கோர்ட்டுக்குப் போனாலும் வெற்றி அவர்களுக்கு தான் கிடைக்கும்  அப்போதுதான் சம்மந்தப்பட்டவருக்கு, அன்றே தாம் எல்லோரிடமும் விடுதளைப்பத்திரமோ வேறு அதற்குரிய அத்தாட்சி ரிகார்டோ எழுதிவாங்காமல்  போனது எவ்வளவு பெரிய தவறு என்பதும் நம்பி மோசம் போய்விட்ட விஷயமும் புரியும் இப்போது புரிந்தோ வருந்தியோ என்ன பிரயோஜனம்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும் ....................

No comments:

Post a Comment