Thursday, May 22, 2014

இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ....
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !

உலகில் இஸ்லாமிய வாரிசுரிமை சட்டம் போன்று வேறு எங்கும் எந்த சமுதாயத்திலும் பார்க்கவே முடியாது இத்தகைய சட்டத்தை நம்முடைய மக்கள் ஓரளவாவது தெரிந்துகொள்ளாத காரணத்தால் உரிமையுள்ளவர்களுக்கு சொத்து கிடைக்காமல் போவதும், உரிமையற்றவர்களுக்கு கிடைத்து விடுகின்ற நிலையம், பலருக்கு இலாபமும், சிலருக்கு இழப்பும், சிலருக்கு சொத்து கிடைக்கின்ற வாய்ப்பும் , சிலருக்கு ஏமாற்றத்தை தருகின்ற நிலைமைகளும் ஏற்பட்டுவிடுகின்றன- இன்னும் சிலரோ பெண் பிள்ளைகளுக்கு சட்டப்படி கொடுக்காமல் எதோ ஒரு தொகையை கொடுத்து இது வாப்பா உடைய சொத்தில் உனக்கு சேரவேண்டிய பாகம் என்று கூறி கணக்கை முடித்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட தவறுகள் நடந்துவிடக்கூடாது, உண்மையான வாரிசுகள் யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது,, ஷரீ அத்  சட்டப்படி வாரிசுதாரர்களுக்கு பாகங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே இந்நூலை தொகுத்துள்ளேன்.
தொகுப்பாசிரியர் ..
அல்ஹாஜ். மௌலவி H . முஹம்மது ஹனீப் மிஸ்பாஹி
அல்லாஹ் அவர்களுக்கு நற்கிருபைச் செய்வானாக!!!


அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ் மனிதனைப்படைத்து, அவனுக்குத் தேவையான அனைத்தையும் படைத்துள்ளான் அவற்றையெல்லாம் தன் வசப்படுத்தி சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் திடீரென்று ஒரு நாள் அனைத்தையும் விட்டு விட்டு காலமாகிவிடுகிறான் . அப்போது அவன் விட்டுச் சென்ற சொத்துகளுக்கு வாரிசுகள் யார் யார் யார் யாருக்கு எந்தெந்த விகிதாச்சாரத்தில் பாகங்கள் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற விஷயங்களை விளக்கி கூறுவதே வாரிசுரிமை சட்டங்களாகும்.

உலகில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஏதோ  ஒரு அடிப்படையில் வாரிசுரிமை சட்டங்கள் இருக்கின்றன. மேலும் சில சட்டங்கள் சட்டவல்லுனர்களால் தொகுக்கப்பட்டு உள்ளன. ஆனால், அவைகள் காலத்திற்கேற்ப மாற்றப்படலாம் திருத்தங்கள் செய்யப்படவும் தோதுவான விதிமுறைகளை கொண்டதாகவும் உள்ளன. மேலும் தேவைகேற்ப புதிய சட்டங்களை சேர்ப்பதற்கும் வழி வகைகள் உள்ளன.

ஆனால்  இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்கள் என்பது அல்லாஹ்வால் மனிதகுலத்துக்கு அருளப்பட்ட சட்டங்களாகும், எனவே அவற்றில் திருத்தங்கள் செய்யவோ , மாற்றங்கள் செய்யவோ , கூட்டவோ, குறைக்கவோ, புதிதாக எதனையும் சேர்க்கவோ முடியாது, அதற்குரிய அதிகாரம் யாருக்கும் கிடையாது . காரணம்  அதற்கான அவசியமோ, தேவையோ உலகம் முடியும் வரையிலும் ஏறபடப்போவதில்லை. இந்த சட்டம் திருக்குர் ஆன் என்று  உலகுக்கு அருளப்பட்டதோ அன்று முதல் [அதாவது -1430 ஆண்டுகளாக] இன்று வரை முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இனியும் அவ்வாறே உலகம் உள்ளவரை பாதுகாப்பாவே இருந்து கொண்டிருக்கும்.

அத்திருமறை கூறுகின்ற சட்டம்தான் இஸ்லாமியர்களின் வாரிசுரிமை சட்டமாகும்,, ஆனாலும் இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணிவிடக் கூடாது  . ஏனெனில் திருக்குர் ஆன் உலகப் பொதுரை ,, அது கூறுகின்ற சட்டங்கள் அனைத்துமே மனித  வாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டக்கூடியதாகவும் , ஏற்று நடப்பதற்கு இலகுவானதாகவும் இருக்கின்றன . எனவே , அதனை யார் வேண்டுமானாலும் ஆராயலாம். அதன்படி நடந்து வாழ்க்கையில் வெற்றியும் பெறலாம்.

அல்லாஹ் தன் திருமறையில் [இறந்து விட்ட] பெற்றோரோ, உறவினரோ விட்டுச்சென்ற [சொத்] திலிருந்து ஆண்களுக்கும் பாகம் இருக்கிறது [அவ்வாறே] பெற்றோரோ உறவினரோ விட்டுச்சென்ற [சொத்]திலிருந்து பெண்களுக்கும் பாகம் இருக்கிறது,, அச்சொத்திலிருந்து குறைவாக இருந்தாலும் அல்லது அதிகமாக இருந்தாலும் - [இது அல்லாஹ்வினால்] விதிக்கப்பட்ட பாகமாக அமைக்கப்பெற்றுள்ளது'' என்று கூறுகிறான்.
அல்குர் ஆன் ..4-7]

இந்த சட்டம் மிகவும் விரிவானதும், நிறைய உட்பிரிவுகளை கொண்டதும். மிக மிக நுட்பமானதாகும் . இதனை அவ்வளவு இலகுவில் யாராலும் புரிந்து கொள்ளவோ விளக்கிக் கூரிடவோ முடியாது. அதற்கென ஒதிப்படித்த கண்ணியயத்திற்குரிய உலமா பெருமக்களில் உள்ள சட்ட  மேதைகளால் மட்டுமே அதற்குரிய விளக்கங்களை கூற முடியும் அவர்களே இஸ்லாமிய ஷரீ அத்  சட்டத்தின் நீதிபதிகளாவார்கள் . அவர்களுக்கு முஃப்திகள் என்று கூறப்படும்.

பாகபிரிவினை மற்றும் ஷரீஅத்  சட்டங்களைப் பொருத்தவரை மரியாதைக்குரிய அந்த முஃப்திகள்  வழங்குகின்ற ஃ பத்வா என்னும் அந்த தீர்ப்பே சரியானதும் முடிவானதுமாகும்  மேற்கொண்டு எங்கு சென்றாலும் அதே தீர்ப்புதான் கிடைக்கும்  அதற்கு அப்பீலே கிடையாது.

இத்தகைய அற்புதமான சட்டத்தைப் பற்றி நபி [ஸல்] அவர்கள்,  ''வாரிசுரிமை சட்டத்தை கற்றுக்கொள்ளுங்கள் அதனை பிறருக்கும் கற்றுகொடுங்கள்  , நான் மரணமடையும் மனிதனாக இருக்கிறேன்  '' என்று கூறியுள்ளார்கள் .

இந்த ஹதீஸ் , வாரிசுரிமை சட்டம் என்பது காலா காலத்துக்கும் மனித குலத்துக்கும்  அவசியம் தேவைப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது , எனவே அதனை  ஒவ்வொரு முஸ்லீமும் அறிந்து அதன்படி செயலாற்றுவது அவசியமாகும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த அந்த சட்டங்களுக்கு சொந்தக்காரர்களாகிய முஸ்லீம்களின்  பெரும்பாலானவர்கள் , அதைப்பற்றி கொஞ்சங்கூட தெரிந்து கொள்ளாமலும், தெரிந்து கொள்ள முயற்சிக்காமலும் இருப்பது வருந்தத்தக்க விஷயம் என்றுதான் கூற வேண்டும்.

இப்படிப்பட்ட மக்களால் உரிய வாரிசுதாரர்களுக்கு முறைப்படி சேர வேண்டிய சொத்துக்கள் போய் சேராமல் தடை ஏற்பட்டு விடுகிறது. சிலர் லாபம் அடையவும் சிலர் பாதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது .

மேலும் பாகபிரிவினை சட்டத்தில் உள்ள நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்ளாமல், ஒருவர் சொத்தை மற்றொருவர் பெயரில் எழுதுவது, அதாவது மனைவி சொத்தை கணவன் பெயரில் , கணவன் சொத்தை மனைவி பெயரில் , மகனின் சொத்தை தகப்பன் பெயரில் தகப்பன் சொத்தை மகனின் பெயரில் எழுதுவது, அதே போன்று ஒரு மனையில் மற்றவர் பணம் போட்டு வீடு கட்டுவது போன்ற காரியங்களை செய்துவிடுகிறார்கள் .

இதனால் அந்த சொத்து பின்வரும் சந்ததிகளுக்கு முறைப்படி போய் சேராமல் வேறு சிலருக்கு போய்  சேர்ந்து விடுகிறது அதுமட்டுமல்ல , அதனால் பல சிக்கல்களும் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு விடுகின்ற வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன  .

இன்ஷாஅல்லாஹ்  தொடரும் ஒவ்வொரு தலைப்பிலும் ...........No comments:

Post a Comment